முடச்சிக்காடு கோயில் கும்பாபிஷேகத்தின் போது நகை திருடிய பெண் கைது.... நகை திருட்டு கும்பல் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை எச்சரிக்கை !!!
காவல்துறை;

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயினை அறுத்துச் சென்ற புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில், பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையில், காவலர்கள் ராஜா, ராகவேந்திரன், அருண்குமார், சிம்ரான், சுரேந்திரன், வினோத் ஆகியோர் அடங்கிய தனி படையினர் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இக்குற்றவாளிகளை அடையாளம் கண்டு சம்பவம் நடந்த அன்றே ஒரு பெண் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நகையுடன் தப்பிய மற்றொரு பெண் குற்றவாளியான கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி வேலம்மாள் (48) என்பவரைக் காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு தங்க செயின்கள் மீட்டனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை எச்சரிக்கை இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "கோவில் திருவிழா கூட்டத்தினை பயன்படுத்தி நகைகளை பறித்துச் செல்லும் கும்பல், அவர்களின் நடமாட்டம் குறித்து, பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கோயில் கும்பாபிஷேகம், திருவிழாவுக்கு நகை அணிந்து செல்லும் பெண்கள் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்" எனத் தெரிவித்துள்ளனர்.