பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளி நூற்றாண்டு விழா
நூற்றாண்டு விழா;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது. பேராவூரணி நகரின் மையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளி கடந்த 1924 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு வரை பேராவூரணியை சுற்றி சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த பள்ளி மட்டுமே இருந்ததால் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பலர் இப்பள்ளியில் படித்து உலக அளவிலும், இந்திய அளவிலும் உயர் அலுவலர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாவும் புகழ் பெற்றுள்ளனர். இப் பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு (தஞ்சாவூர்), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் (பட்டுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக காலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, கல்வெட்டைத் திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் செ.இராகவன் துரை வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் மெர்சி ஏஞ்சலா ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவர்கள் நூற்றாண்டு உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் மாணவர்கள் சார்பாக திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் கலாராணி, அங்கயற்கண்ணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மகாலட்சுமி சதீஷ்குமார், ராஜலெட்சுமி ராமமூர்த்தி , பள்ளி மேலாண்மை குழு தலைவர் இலக்கியா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இறுதியில் ஆசிரியர் சுரேந்தர் நன்றி கூறினார்.