காய்கறி செடிகளை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்த பயன்படுத்த வேண்டிய உரம்
ஆய்வுக்குப் பின் தோட்டக்கலை அலுவலர்கள் அறிவுறுத்தல்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர், கொத்தமங்கலம், சியாத்தமங்கை, துறையூர், கொங்கராயநல்லூர், ஏர்வாடி, கோட்டப்பாடி ஆகிய பகுதிகளில், மிளகாய், கத்தரி, வெண்டை, மற்றும் நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டுள்ள கொடி வகை காய்கறிகளான புடலை, பாகல், பீர்க்கங்காய், சுரைக்காய் மற்றும் மல்லிகை பூ, செண்டிப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில், திருமருகல் வட்டார தோட்டக்கலை அலுவலர் ஆர்த்தி, உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பருவம் தவறிய மழை மற்றும் வெயிலிலிருந்து காய்கறி செடிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படுத்த வேண்டிய உரம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். மேலும், காய்கறி சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த விரும்பும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மிளகாய், கத்தரி நாற்றுகள், தண்ணீர் குழாய்கள் பெற தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தினர்.