பசுமை திட்டங்களை அறிவித்து பள்ளியை பசுமை பள்ளியாக மாற்ற முயற்சி
பள்ளி தலைமை ஆசிரியருக்கு பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு;
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு சுந்தரம் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சள் பை வழங்கினார். மேலும், இல்லம் தேடி சென்று மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த மரங்களை, இயற்கை உரம் கொண்டு வளர்ப்பதற்கு பள்ளியின் அருகில், மண்புழு உரம் தயாரித்தல் எப்படி என்பதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து, உரம் தயாரிக்கும் பயிற்சியினை அளித்தார். கடலில் பிளாஸ்டிக் சென்றதால், கடல் மாசு படுவதை தடுப்பதற்கு கடற்கரை தூய்மை பணியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். முற்றிலுமாக, இப்பள்ளி பசுமை பள்ளியாக மாற, மாணவர்களின் இல்லம் தேடி சென்று மரக்கன்று வழங்கல், செயற்கை உரம் பயன்படுத்தி மண் மலட்டுத்தன்மை அடையாத வகையில் பாதுகாக்க, இயற்கை உரங்களை கொண்டு செடிகளை வளர்க்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்களுக்கு மஞ்சள் பை திட்டம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் மஞ்சள் பை வழங்கல் போன்ற பல்வேறு பசுமை திட்டங்களை அறிவித்து பசுமை பள்ளியாக மாற்றி வருகிறார். தலைமையாசிரியர் நீலமேகத்தின் இந்த முயற்சியை பெற்றோர்கள்,பொதுமக்கள் பாராட்டினர்.