
கன்னியாகுமரி அருகே பொற்றையடி பகுதியில் நான்கு வழி சாலை பணிகளுக்காக குளத்தில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தச் சாலை விரிவுபடுத்தும் பணிக்காக தற்போது நிலம் கையகபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். இந்த கோவில் ஆனது திருவாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மனின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட, வழி ஓட்டகாரனுக்கு கோவில் கட்டியிருந்தார். தற்போது வரை இந்த கோவிலை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சாலை பணிக்காக இந்த கோயிலை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். இத் தகவல் அறிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டஅமைப்பு செயலாளர் ஜெகன் தலைமையில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் விரைந்து வந்து அதிகாரியுடன் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து கன்னியாகுமரி மற்றும் தென்தாமரைகுளம் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ் குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், திருக் கோவில் மராமத்து பொறியாளர் ராஜ்குமார் ,அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோவிலை வேறு இடத்தில் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் கலைந்து சென்றனர்.