கன்னிவாடி அருகே, தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் காயமின்றி தப்பினர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள செம்மன்னாரைச் சேர்ந்தவர் சத்யன் மகன் மனோ (25). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் மகன் அஸ்வின் (22), ரவிச்சந்திரன் மகன் கோகுல் (30), தங்கப்பன் மகன் அரவிந்தன் (25). இவர்கள் 4 பேரும் மதுரையில் பொருட்கள் வாங்குவதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். மனோ காரை ஓட்டி வந்தார். நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே சுரைக்காய்பட்டி பகுதியில் கார் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் சாலையோரம் இருக்கும் சின்னச்சாமி என்பவரது வீட்டுக்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 4 பேரும் காயமின்றி தப்பினர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பில்லை. தூக்க கலக்கத்தில் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னச்சாமி அளித்த புகாரின்பேரில், கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.