
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் அகத்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நிழல் இல்லா நாளை முன்னிட்டு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர். நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும். நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி சென்னையில் 24ம் தேதி நிழல் இல்லா நாளாகும். ஏப்.10ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவில், ஏப்-11ம் தேதி திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏப்.12ம் தேதி தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, ஏப்.13ம்தேதி கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராமேஸ்வரம், ராமநாதபுரம். ஏப்.14ம் தேதி கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி ஆகிய ஊர்களில் நிழல் இல்லா நாளாகும். இதனை முன்னிட்டு அகத்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் வட்டமாக நின்றும், ஒரு மேஜையில் வட்ட வடிவில் உள்ள பொருளின் மையப்பகுதியில் ஒரு குச்சியை ஊன்றி நிழலை அளவு செய்தனர்.இதில் சரியாக 12:22 மணிக்கு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர். ஆரியபட்டா ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்குப்தா கலந்து கொண்டு நிழல் இல்லா நாள் கண்டறிவது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.