பல்லடம் அருகே நின்று கொண்டிருந்த லாரியில் ஆம்புலன்ஸ் மோதி இருவர் பலி மூவர் படுகாயம்
பல்லடம் அருகே நின்று கொண்டு இருந்த லாரியில் ஆம்புலன்ஸ் மோதி இரண்டு பேர் பலியாகினர் மேலும் மூவர் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார் பல்லடம் போலீசார் விசாரணை;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலமூர்த்தி ரோடு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 64). இவரது மனைவி கல்யாணி (60). இவர்களது மகள் பவித்ரா (33). முருகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பட் டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவம்னையில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டையில் இருந்து கோவைக்கு முருகனை அழைத்து வந்தனர். அந்த ஆம்புலன்சை கவியரசு (20) என்பவர் ஓட்டினார். டிரைவர் இருக்கை அருகே விஜய் (20) என்பவர் அமர்ந்து இருந்தார். மேலும் ஆம்புலன்சில் கல்யாணி, பவித்ரா ஆகியோரும் பயணம் செய்தனர். இந்த ஆம்புலன்ஸ் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறமாக ஆம்புலன்ஸ் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் ஆம்புலன்சில் சிக்கியவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய முருகன், கல்யாணி, பவித்ரா, கவியரசு, விஜய் ஆகியோரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன், கல்யாணி ஆகிய 2 பேரும் இறந்து விட்டனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கவியரசுக்கு இரண்டு கால்களும் உருக்குலைந்து போனது. அதே போல் பவித்ரா, விஜய் ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களுக்கு பல்லடம் மருத் துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்ததா? அல்லது ஓட்டுனர் தூங்கி விட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.