சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம்

சென்னிமலை முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.;

Update: 2025-04-12 10:57 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இதற்காக அன்று காலை 7 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவமூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலை கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு கொடியேற்று நிகழ்ச்சி முடிந்த பிறகு அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் படிக்கட்டுகள் வழியாக சாமிகளை கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்து வரவரப்பட்டது.‌ நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) மாலையில் கைலாசநாதர் கோவிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.‌ பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமிகளை தேர் நிலைக்கு சப்பரம் மூலம் கொண்டு வரப்பட்டது அங்கு 3 முறை சாமிகள் தேரை வலம் வந்து தேரில் அமர வைக்கப்பட்டது. அங்கு தேருக்கு கற்பூரம் காட்டப்பட்ட பிறகு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சென்னிமலை அறங்காவலர் குழு தலைவர் ர.பழனிவேல், பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மு.மனோகரன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷத்துடன் தேரை வடம் பிடித்து கிழக்கு ராஜ வீதி,தெற்கு ராஜ வீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக தேரை இழுத்து காலை 6.45 மணிக்கு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினார்கள். மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் இழுத்து நிலை சேர்க்கப்பட்டது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளர் சி.மாணிக்கம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் சென்னிமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.‌ பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான 2 பஸ்களும் தொடர்ந்து இரவு 7.30 மணி வரை மலை கோவிலுக்கு இயக்கப்பட்டது.‌ இன்று பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Similar News