பாஜக - அதிமுக கூட்டணியால் திமுக வெற்றி பெறும் : கி.வீரமணி பேட்டி
அரசியல்;

பாஜக - அதிமுக கூட்டணியால் திமுக கூட்டணி 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அண்ணா திமுகவாக தொடங்கப்பட்ட அதிமுகவின் கதி இப்போது அமித்ஷா திமுகவாக ஆகிவிட்டது. செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாதான் பேசினாரே தவிர, எடப்பாடி பழனிசாமி மவுனமாகவே இருந்தார். எந்தக் கட்டத்திலும் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கூறியவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறிய ஜெயலலிதாவின் தலைமையிலிருந்து அதிமுகவினர் நழுவிவிட்டனர். அக்கூட்டணியில் எத்தனை பேர் சேர்ந்தாலும் திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது. இக்கூட்டணியின் மூலமாக திமுக கூட்டணியின் வெற்றி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை அமித்ஷாவே அளித்துள்ளார். எனவே, வரலாற்றில் அதிமுகவின் கடைசி அத்தியாயம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சொல்லலாம்" என்றார் கி.வீரமணி.