பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா
ஆண்டு விழா;

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 37 ஆம் ஆண்டு விழா மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 45-ஆம் ஆண்டுவிழா சனிக்கிழமை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் இணைந்து நடைபெற்றது. இவ்விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா வெ.இராமச்சந்திரன், பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேரா. அ. ஹேமலதா ஆகியோர் வரவேற்புரையாற்றினர். பல்கலைக்கழக மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுஉறுப்பினர் வீ.அன்புராஜ், பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பூ.கு. ஸ்ரீவித்யா சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். இதில், முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத்தின் மேனாள் மாணவியும், திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், உயர் அழுத்தக் கொதிகலன் பிரிவு மூத்த துணைப் பொது மேலாளர் இரா.பிரதீபா, பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் மாணவியும், திருச்சிராப்பள்ளி, அண்ணா பல்கலைக்கழகம், மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை தலைவர் பேரா பி.ராமதேவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பல்கலைக்கழக வேந்தர் 'தகைசால் தமிழர்' டாக்டர். கி. வீரமணி தலைமை உரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் சார்பில், ரூபாய் 10 ஆயிரத்துக்கான காசோலையை திருச்சிராப்பள்ளியிருக்கும் நாகம்மையார் இல்லத்திற்கு வழங்கினார். பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஆண்டு இதழினை வேந்தர் கி.வீரமணி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் சிறந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் சான்றிதழும் மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகதின் இணை துணைவேந்தர் பேரா. இரா. மல்லிகா நன்றி கூறினார்.