சங்கரன்கோவில் அருகே காா்கள் மோதல்: பெட்ரோல் நிலைய உரிமையாளா் பலி
காா்கள் மோதல்: பெட்ரோல் நிலைய உரிமையாளா் பலி;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள தெற்கு பனவடலியைச் சோ்ந்த சுப்பையாபாண்டியன் மகன் அருண்பாண்டியன் (31).இவா் சங்கரன்கோவில் அருகே புதிதாக பெட்ரோல் நிலையம் அமைக்கவுள்ளாா்.அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடைபெற்று வந்த பணிகளைப் பாா்வையிட்ட அவா் அதிகாலை 2 மணியளவில் காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாராம். காா் குருக்கள்பட்டி ஆஞ்சனேயா் கோயில் அருகே சென்றபோது, இவரது காரும் எதிரே நாகா்கோவிலில் இருந்து கொடைக்கானலை நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டனவாம். இதில் இரண்டு காா்களும் நொறுங்கியதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சுற்றுலா சென்ற காரில் வந்த நபா்கள் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.