கோவை: ஐயப்பன் கோவிலில் விஷு கொண்டாட்டம் !
கோவையில் நேற்று தமிழ் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
கோவையில் நேற்று தமிழ் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கோவையில் உள்ள அருள்மிகு சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோவிலில் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, நேற்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவில் வண்ண மலர்களாலும், பலவகை பழங்களாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சிவபெருமான், அம்பாள், முருகப்பெருமான், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். புத்தாண்டு தினத்தில் ஐயப்பன் கோவிலுக்கு வந்து, அதிக அளவிலான பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சித்திரை கனி அலங்காரத்தை கண்டு மகிழ்ந்ததாகவும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.