கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் இனையம் -புத்தன் துறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இனயம், புத்தன்துறை, ஹெலன் நகர், இனயம் -புத்தன்துறை ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 4067 வீடுகள் மற்றும் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊராட்சி அருகே கீழ்குளம் பேரூராட்சி உள்ளது. இந்த இரண்டு ஊராட்சி, பேரூராட்சியிடையே எல்கை பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் இனயம்புத்தன்துறை ஊராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்கு பிளான் வாங்குவதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு வருவதாக மீனவ மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இனயம் புத்தன்துறை வருவாய் கிராம எல்லையை இனயம் புத்தன்துறை ஊராட்சியுடன் இணைத்து வரையறை செய்ய வேண்டும் என சம்மந்தபட்ட துறையை கேட்டு ஹெலன்நகர் ஊர் மக்கள் தொழில் முடக்கம் செய்து இன்று ஆர்பாட்ட போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.