சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2025-04-17 03:33 GMT
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வருகிற 20-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே கோபுரத்திற்கு வர்ணம் பூசுதல், உள்பிரகார கல் மண்டபம், தூண்கள் புதுப்பித்தல் மற்றும் யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மேலும், கும்பாபிஷேகத்தன்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்கள் வரிசையாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரத்தின் மேல் பகுதியில் கலசங்கள் வைக்கவும், புனிதநீர் எடுத்து செல்ல வசதியாக கம்புகளால் தடுப்புகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணி முதல் குருமார்கள் அழைப்பு, வேள்வி சாலையை புனிதப்படுத்துதல், யாகசாலை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 20-ந் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, காலை 7 மணி முதல் 8 மணி வரை ஆராதனம், மகா ஹோமம், காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடும், 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி தலைமையில் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Similar News