தென்காசியில் மனைவி கண்முன்னே கணவன் தலை துண்டிப்பு
மனைவி கண்முன்னே கணவன் தலை துண்டிப்பு :போலீசார் விசாரணை;
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 36). இவருக்கு தனம் (வயது 30), என்ற மனைவியும், சுதன் (10), சிவகார்த்திகா (7) ஆகிய குழந்தைகளும் உள்ளனர். குத்தாலிங்கம் கீழப்புலியூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இருவரும் ரேஷன் கடை அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் கையில் அரிவாளுடன் மறைந்திருந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென்று பாய்ந்து வந்து குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். தனம் கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் வெறித்தனமாக அவரையும் வெட்டி தலையை துண்டித்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது. அந்த கொலைவெறி கும்பல் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு காசிமேஜர்புரம் அம்மன் கோயில் பகுதியில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும், காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.