குமரி மாவட்டம் குலசேகரம் அரசமூடு பகுதியில் இருந்து பொன்மனை செல்லும் சாலையின் இரு பக்கமும் ரப்பர் மரக்கட்டைகள் குவித்து வைத்துள்ளனர். மேலும் சாலையோரம் நிறுத்தி உள்ள வாகனங்களில் மரக்கட்டைகளை ஏற்றுவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளதாகவும் பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். அரச மூடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்காக ஏராளமானவர் வருகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் மரக்கட்டைகளை ஏற்றிய லாரிகள் இடையூறாக நிறுத்தப்பட்டு இருப்பது விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை வீசி செல்வதால் அந்த பகுதியை முழுவதும் சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. விளையாட்டு மைதானம் அருகில் தான் குலசேகரம் போலீஸ் நிலையம் உள்ளது. எனவே காலை மாலை வேளைகளில் போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொள்ள வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள், ரப்பர் மரக்கட்டைகளை அகற்ற வேண்டும் என்று விளையாட்டு வீரர்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.