கோவை: பைக் சாகசம் சிக்கிய இளைஞர்கள் - மன்னிப்பு வீடியோ வைரல்
நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பைக் ரேஸ்சில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்.;
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில், அதிவேகமாக பைக் ஓட்டி ரீல்ஸ் பதிவிட்ட திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன் மற்றும் தமிழ் நாதன் ஆகிய மூன்று இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இவர்களை நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் மற்றும் கருமத்தம்பட்டி காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்ததை கெத்தாக ரீல்ஸ் பதிவேற்றம் செய்தனர்.vஇதனைக் கண்ட காவல்துறையினர் மீண்டும் அவர்களை அழைத்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்து, அவர்களின் மூன்று பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். பெற்றோரின் வருத்தத்திற்குப் பிறகு இளைஞர்கள் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். தற்போது, அவர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.