ஓடையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி பலி!

கழுகுமலை அருகே ஓடையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி பலியானார்;

Update: 2025-04-18 15:54 GMT
கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பரெட்டியார் மகன் நாகராஜ் (53). விவசாயி. இவருக்கு ஊருக்கு அருகில் தோட்டம் உள்ளது. இந்தநிலையில், இவர் நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து தோட்டத்தில் உழவுப்பணிக்கு டிராக்டரில் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஓடைக்கரையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சில அடிதூரம் ஓடியுள்ளது. அப்போது அருகே உள்ள 10 அடி ஆழமுள்ள ஓடைப்பள்ளத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்று டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்த அவரது உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன நாகராஜூவுக்கு முத்துமாரி (45) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். டிராக்டர் ஓடைப்பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News