கோவை: பொன்முடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக புகார் !
அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.;
அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.முருகானந்தம், அமைச்சர் பொன்முடியின் பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் புண்படுத்திவிட்டதாகவும், திமுக தலைவர்கள் தொடர்ந்து இந்து மதத்தையும், அதன் முக்கிய நபர்களையும் இழிவுபடுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், குற்றங்கள் அதிகரிப்பதற்கு அமைச்சர் பொன்முடியின் செயல் ஒரு உதாரணம். எரிமலை வெடிக்கும் சூழலை திமுக அரசு உருவாக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதையும் அவர்கள் புண்படுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். கட்சியில் பொறுப்பிலிருந்து மட்டும் நீக்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. மேற்கு வங்கத்தில் சிறிய பிரச்னைகள் பெரிய பிரச்னையாக மாறியது போல, தமிழகத்திலும் நடக்கும். தாலியை அறுக்கும் விஷயங்களுக்கு கூட்டம் போடுபவர்களுடன் ஏன் பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் பொன்முடியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்பது நியாயமல்ல என்றும் கூறினார்.