கோவை: விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக கையெழுத்து !
சோமனூர் பகுதியில் விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து போட்டது.;
கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோமனூரில் போராட்டம் 28 நாட்களை எட்டியுள்ள நிலையில், தொழிலாளர்கள் அடுத்த கட்டமாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நேற்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால், நாளொன்றுக்கு சுமார் ₹60 கோடி வீதம், இதுவரை ₹1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, சோமனூரில் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், அரசு தரப்பில் உரிய பதில் அளிக்கப்படாததால், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வி.பி. கந்தசாமி (சூலூர்) மற்றும் பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் சோமனூரில் உள்ள உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் சென்று தொழிலாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி, அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இல்லையெனில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.