கோவை: புனித வெள்ளி - சிலுவைப் பாதை ஊர்வலம் !
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான புனித வெள்ளியை முன்னிட்டு, கோவையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், சிலுவைப் பாதை ஊர்வலமும் நடைபெற்றன.;
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான புனித வெள்ளியை முன்னிட்டு, கோவையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகளும், சிலுவைப் பாதை ஊர்வலமும் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் இந்த புனித நாளில், கிறிஸ்தவ மக்கள் திரளாக தேவாலயங்களில் கூடி பக்தி சிரத்தையுடன் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித மைக்கேல் தேவாலயத்தில் நேற்றுசிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசுவின் வாழ்க்கையில் அவர் அனுபவித்த துன்பங்களையும், அவர் போதித்த நற்போதனைகளையும் நினைவு கூறும் வகையில் சிலுவைப் பாதை ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, சிலுவையின் பாதையைத் தொடர்ந்து பக்திப் பாடல்கள் பாடியும், ஜெபம் செய்தும் வந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், இயேசுவின் தியாகத்தையும், மன்னிக்கும் குணத்தையும் நினைவுகூர்ந்து அவரைப் பின்பற்றி வாழ உறுதியேற்றனர். மேலும், உலக மக்கள் அனைவரும் அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.