கோவை: உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் துவக்கி வைப்பு!
உலக மரபு தினத்தை முன்னிட்டு கோவையில் பந்தைய சாலையில் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
உலக மரபு தினத்தை முன்னிட்டு கோவையில் நேற்று பந்தைய சாலையில் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மரபு காப்போம், பண்பாட்டை போற்றுவோம், வரலாற்றை மீட்போம் என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார். ஆறு கல்லூரிகளைச் சேர்ந்த திரளான மாணவ மாணவிகள் மரபின் சிறப்பை உணர்த்தும் பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு பாரம்பரிய விழுமியங்களையும், தொன்மையான வரலாற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். பந்தைய சாலை முகப்பில் இருந்து மீடியா டவர் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்தில் பேரணி நிறைவடைந்தது. பேரணி குறித்து தனியார் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பெருமையை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வது அவசியம் என்றும், பழங்கால அடையாளங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதிலும் தங்கள் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க நிதி ஒதுக்கும் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு பேரணி, கோவையில் மரபு மற்றும் பண்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்தியது.