சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!;

Update: 2025-04-19 19:53 GMT
திண்டுக்கல் மாவட்டம், கீழ்ப் பழனி மலையிலுள்ள பன்றிமலையை அருகே ரெட்டரைப் பாறை, அழகுமடை உள்ளிட்ட பகுதிகளில் வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ரெட்டரைப்பாறை பகுதியில் மட்டும் சுமாா் 5 ஏக்கா் வாழைகளை சில நாள்களுக்கு முன்பு யானைகள் நாசம் செய்தன. இந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஆடலூருக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்து அழகுமடை கிராமத்தைக் கடந்த போது, சிறிது தொலைவில் 4 யானைகள் சாலையில் நின்றிருந்தன. யானைகளைப் பாா்த்ததும், ஓட்டுநா் பேருந்தை ஓரமாக நிறுத்தினாா். இதையடுத்து, 3 யானைகள் அருகிலுள்ள கம்பி வேலியை சேதப்படுத்திவிட்டு தோட்டத்துக்குள் புகுந்தன. ஒரு யானை, பேருந்தை நோக்கி வந்தது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பேருந்து அருகே வந்த அந்த யானை தந்தத்தால் முன் பகுதியில் பேருந்தை உரசிவிட்டு திரும்பிச் சென்றது. இதனால் ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் அனைவரும் நிம்மதியடைந்தனா். இந்த பரபரப்புகளுக்கு இடையிலும் பயணிகள் சிலா், கைப்பேசியில் யானைகளை புகைப்படம் எடுத்தனா்.

Similar News