மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா !

மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா: திருவிளக்கு பூஜை கோலாகலம்;

Update: 2025-04-20 18:10 GMT
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் அமைந்துள்ள அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று (19ம் தேதி) வெகு சிறப்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த எட்டாம் தேதி திருவிழா பூச்சாட்டுடன் தொடங்கிய இந்த விழாவில், அக்னி கம்பம் நடப்பட்டது. நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையை மூலத்துறை அர்ச்சகர் சரவணன் அவர்கள் வழிநடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமியர் கலந்து கொண்டு, விளக்குகளுக்கு பூக்கள் மற்றும் குங்குமம் சமர்ப்பித்து பக்தி சிரத்தையுடன் வழிபட்டனர். முன்னதாக, மூலவர் அம்மன் சுவாமிக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இன்று (20ம் தேதி) ராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் கரகம் மற்றும் பூச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, இரவு ராஜா மகா சக்தி வள்ளிக்கும்மி குழுவினரின் அரங்கேற்ற நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெறும். வரும் 22ம் தேதி அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும், 23ம் தேதி சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் அலங்கார பூஜையும், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், அதனைத் தொடர்ந்து 25ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Similar News