கோவை: அமைச்சர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை !
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கோவை, திருப்பூர், பல்லடம் மற்றும் அவிநாசி பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.;
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கோவை, திருப்பூர், பல்லடம் மற்றும் அவிநாசி பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் இரு மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் நடைபெற்ற இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார். அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த போராட்டத்திற்கு முடிவு கட்டும் வகையில் இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அது சுமூகமாக முடிவடைந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதியளித்தார். செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி, விசைத்தறி தொழிலாளர்களை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சுமூக உடன்பாடு தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.