குமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் வினோ (38) அதே பகுதி சிறுகூடல் அருகே கீழபுலியூர் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (43) இவர்கள் இருவரும் சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்த போது பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது வினோத்குமார் தனக்கு கம்போடியா நாட்டில் உள்ள பிரபல ஓட்டலை சேர்ந்த நபர்களுடன் பழக்கம் உள்ளதாகவும், அங்கு வினோவுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூபாய் 1லட்சத்து 43 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. இதனை நம்பிய வினோ அந்த பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் வினோவை கம்போடியா நாட்டில் உள்ள போலி நிறுவனத்தில் சேர்த்து விட்டு, அந்த நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 3 லட்சத்தை வினோத்குமார் பெற்றுக் கொண்டார். இதை அடுத்து வினோ தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இந்த பண மோசடி குறித்து வினோ குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வினோவிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.