கோவை: கிராம ஊராட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிராம ஊராட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-22 04:10 GMT
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிராம ஊராட்சி ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் மேல் நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், சுகாதார ஊக்குனர்கள், கணினி இயக்குபவர்கள், பள்ளி தூய்மை பணியாளர்கள் மற்றும் தற்காலிக மேல் நிலைத் தொட்டி இயக்குபவர்கள் என ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவிக்கையில், தங்களுக்கு நாளொன்றுக்கு 137 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5000 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும், மற்ற களப் பணியாளர்களுக்கு இதைவிடக் குறைவாக ஊதியம் வழங்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் இல்லாததால் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். எனவே, தங்களது கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியிட்டு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் ஊழியர்கள் எச்சரித்தனர்.

Similar News