அரசுக்கு சொந்தமான லேஅவுட் போட்டு விற்பனை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை சட்ட விரோதமாக லேஅவுட் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.;
திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை சட்ட விரோதமாக லேஅவுட் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அக்கரப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 27 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 7.88 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர், அந்த நிலத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கிராம நத்தம் வகைப்பாட்டில் சிட்டா, அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்து அதனை போலியாக பத்திரப்பதிவு செய்து தற்போது வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதாகவும் இது சம்மந்தமாக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடமும் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக முற்றுகையிட்டு கிராமத்திற்கு சொந்தமான அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மீட்டு தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் இது சம்மந்தமாக புகார் மனு அளித்தனர்.