கோவை: ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு தேவை - வானதி கோரிக்கை
கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் ரயில் சேவைகளை வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.;
கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் ரயில் சேவைகளை வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார். தெற்கு ரயில்வேயின் முக்கிய வருவாய் ஈட்டும் நிலையமாக இருந்தும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கோவை பகுதி மக்கள் ரயில் பயணத்தில் சிரமங்களை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மனுவில் பின்வரும் முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்,மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயில் சேவையை பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வரை நீட்டிக்க வேண்டும். ஈரோடு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவையை கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும். கோயம்புத்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் சேவையை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம் - கோயம்புத்தூர் இடையே எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு வழியாக புதிய வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். நாகர்கோவில்/கோயம்புத்தூர்/நாகர்கோவில் - பழனி இடையே ஜனசதாப்தி ரயில் சேவையை இயக்க வேண்டும். கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.