கோவை: பட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை !
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டாப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அரசு பேருந்து நடத்துனரும், பைனான்ஸ் தொழில் செய்து வருபவருமான துரையப்பன் என்ற பழனிச்சாமி (74) என்பவர் இப்பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சாமியான கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நேற்று பேத்திக்கு சீர் செய்வதற்காக பத்திரிக்கை கொடுப்பதற்காக தனது மூத்த மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், பீரோவில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கப்பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை ஆணையர் மற்றும் வடவள்ளி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.நகை மற்றும் ரொக்கம் திருடு போனது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.