சங்கரன்கோவிலில் சலவை தொழிலாளர் நல சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
சலவை தொழிலாளர் நல சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் குழந்தை வள்ளுவன் தலைமையில் சலவை தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதாவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- .தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ. மருதப்பபுரம் பஞ்சாயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சலவை தொழிலாளர்களுக்கு அப்போதைய திருநெல்வேலி மாவட்ட கலெக்டரால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் இலவச வீட்டு மனை பட்டா பெற்ற சலவை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் வீடு கட்ட முற்பட்டனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் இலவச வீட்டுமனை பட்டா நிலத்தில் முள்வேலி அமைத்து அவருக்கு சொந்தம் என்று கூறி வருகிறார். இது தொடர்பாக சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சலவை தொழிலாளருக்கு வழங்கியுள்ள இலவச வீட்டு மனை பட்டா இடத்தை தனி நபரிடம் இருந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வீடு கட்ட பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளனர்.