தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புளியங்குடி துணை கண்காணிப்பாளர் மீனாட்சிநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், தலைமை காவலர் சுந்தர்ராஜ், இளையராஜா ஆகியோர் சிவகிரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராயகிரி அருகே டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் 1300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த துரைச்சாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் கிருஷ்ணசாமி(வயது - 38) என்பவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து சிவகிரி காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அரிசி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சேத்தூர் சொக்கநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.