கோவை: அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை - ஆட்சியர் ஆய்வு !
கிட்டாம்பாளையம் கிராமத்தில் ரூ.24½ கோடி மதிப்பீட்டில் 316 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
கோவை மாவட்டம், சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் கிராமத்தில் ரூ.24½ கோடி மதிப்பீட்டில் 316 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொழிற்பேட்டையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் பணிகளான சாலைகள், சிறு பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அனைத்துக் கட்டடங்களுக்கும் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் இதர இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தொழிற்பேட்டையில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் மரக்கன்றுகளை விரைவாக நட்டு பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். தொழிற்பேட்டையின் எஞ்சியுள்ள பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.