கோவை: ரஜினிகாந்த் வருகை - ஆனந்த வெள்ளத்தில் ரசிகர்கள்!
கோவையில் ரஜினிகாந்த் காரில் சென்றபோது, ரசிகர்கள் தலைவா, தெய்வமே என்று முழக்கமிட்டு காரை சூழ்ந்துகொண்டனர்;
தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி, அட்டப்பாடி பகுதியில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வருகிறார். அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருக்கும் அவரைப் பார்ப்பதற்காக நாள்தோறும் திரளான ரசிகர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் ரிசார்ட் முன்பு கூடி வருகின்றனர். சமீபத்தில் படப்பிடிப்புக்குச் சென்ற ரஜினிகாந்தை பார்த்த ரசிகர் ஒருவர் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி கும்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு ரஜினிகாந்த் சென்றார். இந்நிலையில், நேற்று படப்பிடிப்பிற்காக கேரளாவிற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், கோவை அருகே உள்ள தமிழக சோதனைச் சாவடியான மாங்கரைக்கு வந்திருந்தார். இந்தத் தகவல் அறிந்ததும் அப்பகுதி ரசிகர்கள் அங்கு திரண்டனர். பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ரஜினிகாந்த் காரில் சென்றபோது, ரசிகர்கள் தலைவா, தெய்வமே என்று முழக்கமிட்டு காரை சூழ்ந்துகொண்டனர். ரசிகர்களின் அன்புக்கு நெகிழ்ந்த ரஜினிகாந்த், அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.