கோவை: பெட்ரோல் குண்டு மிரட்டல் - வாலிபர் கைது !
கோவையில் செவிலியராகப் பணியாற்றும் பெண்ணை வாலிபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி எரித்து விடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோவையில் செவிலியராகப் பணியாற்றும் கலா என்பவரை, முகமது தனிஷ் (25) என்ற வாலிபர் பெட்ரோல் குண்டு வீசி எரித்து விடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் கலா, சில வருடங்களுக்கு முன்பு டவுன்ஹாலில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தபோது முகமது தனிஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முகமது தனிஷுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது தெரியவந்ததும் கலா அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், கலாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆன பிறகும் முகமது தனிஷ் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெட்ரோல் குண்டு வீசி எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார். நேற்று கலா தனது கணவருடன் கே.பி.ஆர் காலனி அருகே நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த முகமது தனிஷ், கலாவின் கணவரைத் தாக்கி கீழே தள்ளி காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கலா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் முகமது தனிஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.