விஷம் குடித்து பெண் உயிரிழந்த விவகாரம்: நீதிமன்ற உத்தரவின்படி சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு

கிரைம்;

Update: 2025-04-25 16:51 GMT
தஞ்சாவூா் அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி பெண்ணின் சடலத்தை 16 நாள்களுக்கு பிறகு உறவினா்கள் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சோ்ந்த அய்யா தினேஷை வழக்கு தொடா்பாக நடுக்காவேரி போலீஸாா் ஏப்ரல் 8-ஆம் தேதி கைது செய்தனா். ஆனால், போலீஸாா் பொய் வழக்கு போடுவதாக காவல் நிலையம் முன்பு, தினேஷின் சகோதரிகள் மேனகா, கீா்த்திகா இருவரும் விஷம் குடித்ததில் கடந்த ஏப். 9- இல் கீா்த்திகா உயிரிழந்தாா். இதையடுத்து, கீா்த்திகாவின் உறவினா்கள் ஆய்வாளா் சா்மிளாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், ஆய்வாளா் சா்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாா், மேலும், 2 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா் ஆகியோா் இட மாற்றம் செய்யப்பட்டனா். ஆனாலும், ஆய்வாளா் சா்மிளா மீது கொலை வழக்குப் பதிந்து அவரை கைது செய்ய வேண்டும், தினேஷ் மீது நிலுவையில் உள்ள 13 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 நாள்களாக கீா்த்திகாவின் சடலத்தை வாங்க உறவினா்கள் மறுத்து வந்தனா். அதனால் உடல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கீா்த்திகாவின் மரணம் தொடா்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் உறவினா் ஒருவா் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் சடலத்தை வாங்கி அடக்கம் செய்ய வேண்டும். இல்லாவிடில், காவல்துறையினா் அடக்கம் செய்து விடுவாா்கள் என தெரிவித்தது. இதுதொடா்பாக, கீா்த்திகாவின் உறவினா்களிடம் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பான வழக்கு மீண்டும் ஏப்ரல் 28 -இல் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை ஏற்று, 16 நாள்களுக்குப் பிறகு கீா்த்திகாவின் சடலத்தை அவரது உறவினா்கள் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனா்.

Similar News