கோவை: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - விஇப ஆர்ப்பாட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் 27 அப்பாவி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் நேற்று கோவையில் செஞ்சிலுவை சங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் தீவிரவாதிகள் இந்துக்களை குறிவைத்து கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்ற பயணிகளிடம் அவர்களின் பெயர் மற்றும் மதத்தை கேட்டறிந்து, அவர்கள் இந்துக்கள் என்று தெரிந்தவுடன் ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.