வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இரண்டு பேர் கைது

பல்லடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இரண்டு பேரை பல்லடம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்;

Update: 2025-04-27 12:50 GMT
பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி காமாட்சி அம்மன் நகரில் வசிப்பவர் சிவலிங்க பெருமாள் (வயது 43). இவர் அருள்புரம் பகுதியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 22-ந் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகள், வெள்ளி காமாட்சி விளக்கு, கொலுசு, மிக்சி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிவலிங்க பெருமாள் வீட்டில் திருடியதாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த மணிகண்டன் (44), உப்பிடாதி (26) ஆகிேயாரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன.

Similar News