கடன் சுமை தாங்க முடியாமல் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

ஆன்லைனில் கடன் வாங்கிய டெய்லர் தூக்கிட்டு தற்கொலை. அவனாசி காவல்துறை விசாரணை.;

Update: 2025-04-27 12:59 GMT
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆட்டையம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் தங்கராஜ் (42) .இவர் தனது மனைவி அம்பிகா (34), மூத்த மகள் ஸ்ரீ ஹர்ஷா (11) மற்றும் மகன் தருண் வர்ஷன் (9) ஆகியோருடன் வசித்து வருகிறார். தங்கராஜ் மற்றும் அவரது மனைவி அம்பிகா என இருவரும் அவிநாசி, கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகின்றனர். தங்கராஜ் ஆன்லைன் செயலிகள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக நிறைய கடன்கள் வாங்கி தவணைகள் செலுத்தி வந்துள்ளார். சமீப காலங்களாக வேலை சரியாக இல்லாததால் கடன் தவணைகளை செலுத்த முடியாமல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் வசித்து வரும் தங்கராஜின் தாயார் வழக்கம்போல வீட்டிற்கு வந்து பார்த்தபோது தன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அவிநாசி போலீசார் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் சுமை தாங்க முடியாமல் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News