பொதுமக்கள் மஞ்சப்பை உபயோகிக்க விழிப்புணர்வு
மீண்டும் மஞ்சப்பை தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு;
ஈரோடு மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடர்பாக நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேயர் நாகரத்தினம் பேசியதாவது பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்து போராடி வரும் அதே வேளையில், துணி பைகள் போன்ற உகந்த மாற்றுகளை பயன்படுத்தும் பாரம்பரிய தமிழ் நடைமுறையை மீண்டும் உயிர்ப்பிப்பதை நோக்கமாக கொண்டு, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டத்திற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் கழிவுகளால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவதை தடுக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும், மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முக்கியத்துவத்தையும், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் எடுத்துரைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்