கோவை: பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆதவ அர்ஜுன் கண்டனம் !
பூத் கமிட்டி மாநாட்டிற்கு தமிழக காவல்துறை சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியிருந்த போதிலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என ஆதவ் குற்றச்சாட்டு.;
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் பூத் கமிட்டி மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. கட்சியின் தலைவர் விஜய் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து விஜய் சென்னை திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆதவ அர்ஜுன் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பூத் கமிட்டி மாநாட்டிற்கு தமிழக காவல்துறை சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியிருந்த போதிலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே பவுன்சர்களை பயன்படுத்த வேண்டியதாயிற்று என்று தெரிவித்தார். மேலும், போதிய பாதுகாப்பு வழங்காதது குறித்து தமிழக முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியான போராட்டங்களை நடத்த வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்தார். தமிழக அமைச்சரவையில் நிலவும் பதவி விலகல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆதவ அர்ஜுன், இன்னும் நிறைய அமைச்சர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்வார்கள் என்று கூறினார். கல்லூரிகளில் இதுபோன்ற கட்சி நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும் ஏன் மாநாடு நடத்தப்பட்டது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் நடத்தியது பயிற்சிப் பட்டறைதான், அனுமதி உள்ளது என விளக்கமளித்தார்.