கோவை: வெள்ளலூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவரின் வழக்கில் நான்கு பேர் கைது !
கோவை வெள்ளலூரில் பாதியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலைய கட்டிடத்தில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
கோவை வெள்ளலூரில் பாதியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலைய கட்டிடத்தில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா (21) கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டும், உடல் முழுவதும் காயங்களுடனும் காணப்பட்டார். போத்தனூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், சூர்யாவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவரான கார்த்திக் (21) என்பவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில், கார்த்திக் தனது நண்பர்களான நவீன்கார்த்திக், மாதேஷ் (21), முகமது ரபி (21) ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை கோவைக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்தது. சூர்யாவுக்கு மது கொடுத்து, போதை ஏறியதும் கை, கால்களை கட்டி, போதை ஊசி செலுத்தி மயக்கமடையச் செய்து தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வீச முயன்று, ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் பாதியில் கட்டப்பட்ட பஸ் நிலைய கட்டிடத்துக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.