கோவை: கே.பி.ஆர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 2020-2023 ஆம் கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.;
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 2020-2023 ஆம் கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தந்த மக்கள் தொடர்பு செயல்பாட்டாளரும், கிராப்டன் இந்தியா நிறுவனத்தின் திரு. சவ்ரப் ஷா அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களையும், விருதுகளையும் வழங்கி உரையாற்றினார். தமது உரையில், மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்தியாவின் இளம் தலைமுறையினர் புதிய தொழில்நுட்பங்களை நடைமுறை வாழ்வில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இவ்விழாவில் வணிகவியல் புலமுதன்மையர் முனைவர் குமுதாதேவி, புலமுதன்மையர் முனைவர் சர்மிளா மற்றும் மேலாண்மையியல் புலமுதன்மையர் முனைவர் ஆனந்த் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 528 மாணவர்கள் தங்களது பட்டங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.