ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர் மீட்பு
தீக்குளிக்க முயற்சி;
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில், ஓராண்டாகியும் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை எனக் கூறி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க ஊழியரை காவல் துறையினர் மீட்டனர். தஞ்சாவூர் அருகே திட்டை பகுதி தாளக்குடியைச் சேர்ந்தவர் ஆர்.கண்ணன் (61). இவர் திட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும், பின்னர் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும் எழுத்தராகப் பணியாற்றி 2024, மார்ச் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவர் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கக் கோரி உயர் அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தாராம். ஆனால், இதுவரை ஓய்வூதியப் பலப்பலன்கள் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். பின்னர், அரங்கத்துக்கு வெளியே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.