குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் இருந்து செண்பகராமன் புதூர் செல்லும் சாலையில் லுத்தரன் தேவாலயம் உள்ளது. நேற்று முன்தினம் காலையில் பிரார்த்தனை நடத்தப்பட்டு தேவாலயத்தை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்லும் போது தேவாலயத்தின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது கண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. உள்ளே கபோர்டில் இருந்த 10 உண்டியல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைகள் திருடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆலய நிர்வாகிகள் அரல்வாய்மொழி போலீசருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். தேவாலயத்தின் முன்புற கதவு திறக்காமல் பின்புற கதவை மட்டும் திறந்து போட்டு விட்டு செல்லப்பட்டுள்ளது. இந்த கொள்ளை ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது யாராவது உள்ளே புகுந்து பதுங்கி இருந்து திருடப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மட்டுமின்றி கொள்ளையர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த தேவாலயத்தில் சிசிடிவி கேமரா இல்லை. எனவே அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.