மேய்ச்சலுக்கு சென்ற மாடு இறந்து கிடந்ததால் சந்தேகம் : காவல்துறை வழக்கு பதிவு
மாடு மர்ம சாவு;
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆத்திக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துச் செல்வம். விவசாயி இவர் கன்றுடன் கூடிய பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது தந்தை தமிழரசன் அதே ஊரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது இடத்தில் தனது பசு மாட்டையும், கன்றுக் குட்டியையும் மேய்ச்சலுக்காக கட்டி விட்டு வந்து விட்டார். மாலையில் சென்று பார்க்கும் போது மாடு இறந்து கிடந்தது. இறந்து கிடந்த மாட்டின் ஆசன வாயில் ரத்தம் வழிந்து கிடந்ததால் மாட்டின் சாவில் மர்மம் இருப்பதாக முத்துச் செல்வம் பட்டுக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வந்து பசுமாட்டை பார்த்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர், பசு மாடு இறந்து கிடந்த இடத்திலேயே, மாட்டுக்கு உடற்கூறாய்வு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் மாடு இறந்ததற்கான காரணம் தெரிந்த பிறகு காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மாடு இறந்ததும் அதன் கன்றுக் குட்டி, தாய் இறந்தது கூட தெரியாமல் சுற்றிச்சுற்றி வந்து இறந்து கிடந்த மாட்டிடம் பால் குடிக்க முயற்சித்தது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது .