சொத்து தகராறில் ஏற்பட்ட கொலை வழக்கில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம் பாப்பநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட ஆம்பலாப்பட்டு பகுதியில் சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 02.04.2025-ம் தேதி தீர்க்கரசன் என்பவர் பாப்பாநாட்டில் இருந்து தனது வீடான ஆம்பலாப்பட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது, அவருடைய இருசக்கர வாகனத்தை வழிமறித்து சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் படுகாயமடைந்த தீர்க்கரசன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 09.04.2025- ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஹேமா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாப்பாநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளான பாப்பாநாடு சரித்திர பதிவேடு குற்றவாளியான திருக்குமார்(வயது-49), ஆம்பலாபட்டுவைச் சேர்ந்த அவரது அண்ணன் கலையரசன் (வயது-46), தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரி சாலையைச் சேர்ந்த சசிகுமார்(வயது-52) மற்றும் முனிஷ்குமார்(வயது-34) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியான திருக்குமார்(வயது-49) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டி, ஒரத்தநாடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோளின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி 21.05.2025-ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.