தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் பகுதியில் இளைஞரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போனும் மீட்கப்பட்டது. தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் இளையராஜா (38). இவர் கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் இளையராஜா வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா இது குறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இளையராஜாவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றவர்கள் வல்லம் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கோபி என்கிற செல்வா (20), முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம் (24), சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சாரதி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வா உட்பட மூன்று பேரையும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.