மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள்...பாய்ச்சல்
மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள்...பாய்ச்சல்:மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால் வாக்குவாதம்;
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை என, பொறியியல், சுகாதாரம், வருவாய் பிரிவு அதிகாரிகள் மீது, கவுன்சிலர்கள் நேற்று வெகுவாக சாடினர். குப்பை பிரச்னை தீராமல் தொடர்வதால், மேயருக்கு நிர்வாக திறனில்லை என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வார்டு பிரச்னைகளை தீர்க்கக்கோரி தர்ணா போராட்டமும் நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், அண்ணா அரங்கம் முதல் மாடியில், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர். காரசார விவாதம் மொத்தமுள்ள 95 தீர்மானங்களில், 85 மற்றும்91 ஆகிய இரு தீர்மானங்களும் ஒன்றாக தவறுதலாகபதிவாகி இருந்ததால், ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வதாக மேயர் மகாலட்சுமி தெரிவித்தார்; மீதமுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் துவங்கிய உடன், மாநகராட்சி கூட்டத்தின் தீர்மானம் வாசித்தனர். அதை இடைமறித்து, கவுன்சிலர்கள் பலரும் தங்கள் வார்டு மற்றும் பொது பிரச்னை குறித்து காரசாரமாக பேசினர். கூட்டம் துவங்கிய உடன், பணிகள் நிலைக்குழு தலைவர் கார்த்தி பேசுகையில், ''குப்பை அகற்றுவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, வணிக நிறுவனங்களில் மாநகராட்சி ஊழியர்கள் அல்லாதோரால் அகற்றப்படும் குப்பை, மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது,'' என குற்றஞ்சாட்டினார். மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், இது குறித்து விசாரிப்பதாக கூறி மழுப்பினர். அப்போது, 23வது வார்டில் பாதாள சாக்கடை பிரச்னை தொடர்ந்து எழுகிறது. தங்களது வார்டில் உள்ள பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் தான் எழுந்து செல்வேன் என, அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா, மாநகராட்சி கூட்டத்திலேயே மேயர் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேயர் மகாலட்சுமி, கவுன்சிலர் புனிதாவை சமாதானம் செய்தார். 23வது வார்டில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் பணிகள் செய்ய இருப்பதாக பொறியாளர் கணேசன் தெரிவித்தார். பணிகள் செய்ய ஏற்பாடு செய்வதாக மேயர் மகாலட்சுமி தெரிவித்த பிறகே, கவுன்சிலர் புனிதா எழுந்து சென்றார்.